Feast, Uncategorized

கந்த சஷ்டி விரதம்

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டிவிரதம். இந்த விரதத்தின் சிறப்பை வைத்தே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் வீட்டில்ச் செல்வம் கொழிக்கும் என்பது பொருளாகும். கந்தசஷ்டி விரதம், ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சஷ்டி என்றால் ஆறு என்று பொருளாகும். கந்தசஷ்டி விரதமானது முருகக் கடவுள் ஆறு நாட்கள் சூரனுடன் போர் புரிந்து ஆறாவதுநாள் சஷ்டி அன்று சூரனை அழித்த தினமான சூரன்போருடன் முடிவடைகிறது. முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந்தவமாகக் கருதி, அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்டு மிகுதி .ஆறு தினங்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை கடைப்பிடிப்பது ஒருமுறை. அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது. இவ்விரத முறையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, அல்லது ஐந்து நாட்களும் இரவுவேளையில் மட்டும் உணவருந்தி ஆறாம் நாள் உபவாசம் இருந்து ஏழாம் நாள் காலையில் உணவு அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர் விரத தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து, காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்து விரதத்தினை ஆரம்பிப்பது வழக்கம். பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் கோவிலில் காப்பை அவிழ்த்து பூசை செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி பாரணைப் பூஜை முடிந்தது விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் உன்னதமான விரதம் இந்த கந்த சஷ்டி விரதமாகும். முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நடைபெறும். கந்த சஷ்டி விரத வரலாறு சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும்துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். சிவபெருமானது நெற்றியிலிருந்து தெறித்த பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாகத் தோன்றின அக்குழந்தைகளை உமாதேவியார் அணைத்து எடுக்க ஆறுதிருமுகமும், பன்னிரண்டு திருக்கையமுடைய ஓருருவாய் முருகப் பெருமான் எழுந்தருளினார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்பெருங் கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறைமுதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாக முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது. சூர சம்காரத்தின் முடிவில் முருகன், மாமரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார் என கந்தபுராணம் கூறுகிறது. கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகும். ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும். இவ்விரதத்தின் போது, தினமும் கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்தபுராணம் ஆகியவற்றைப் படிப்பது என்பது வழிபாட்டின் ஒரு பகுதியாகும். ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை பெண்கள் அறுவரால் வளர்க்கப்பட்டவன். அவனது மந்திரம் ஆறெழுத்து. அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரதநாட்கள் ஆறு. ஆறெழுத்து மந்திரம்  (ச ர வ ண ப வ) ச  – லட்சுமி கடாட்ச்சம்ர – சரஸ்வதி கடாட்ச்சம்வ – போகம் – மோக்ஷம்ண – சத்துரு ஜெயம்ப – ருத்யு ஜெயம்வ – நோயற்ற வாழ்வு ஆறுபடை வீடுகள் ஆறுபடை வீடுகளும் ஆறு ஆதாரங்களாக விளங்குகின்றன. திருப்பரங்குன்றம் – மூலாதாரம் திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம் பழனி – மணிபூரகம் சுவாமிமலை – அனாஹதம் திருத்தணிகை – விசுத்தி பழமுதிர்சோலை – ஆக்ஞை. சரவணப் பொய்கை முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான  திரு ஆவினன் குடியில் (பழனி) சுப்பிரமணிய சுவாமி கோவில் மலையடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சரவணப் பொய்கையாகும். கந்தர் சஷ்டி கவசம் பாலன் தேவராஜன் என்ற முருக பக்தனால் ஆறுபடை வீடுகளையும் நோக்கி எழுதப்பட்ட முருக புராணங்களில் திருச்செந்தூர் முருகனைநோக்கிப் பாடப்பட்ட கந்த சஷ்ட்டி கவசமே பிரபல்யமாகி எல்லோராலும் பாராயணம் பண்ணப்படுகிறது. திருச்செந்தூர் முருகனை நோக்கி பாலன் தேவ ராயன் என்பவரால் பாடப்பெற்ற கந்தர் சஷ்டி கவசத்தினை தினமும் காலையிலும் மாலையிலும் சிந்தை தவறாது முருகன் மீது பக்தி வைத்து பாராயணம் பண்ணவேண்டும். அதிலும் தினமும் முப்பத்தாறு தடவைகள் ஒரே சிந்தனையோடு தொடர்ந்து பாராயணம் பண்ணி விபூதி பூசி வழிபட்டால் எட்டுத் திக்கும் உன்வசமாகும். எட்டுத் திக்கிலும் உள்ள தெய்வங்கள் உனக்கு அருள்புரியும். எதிரிகள் கூட உன்னைத் தேடி வந்து வணங்குவர் என்று கூறுகிறார் உதாரணமாக கந்தர் சஷ்டி கவசத்தில், “ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்துநீ றணிய” என்று ஒரு வரி வருகிறது. அதாவது கந்தர் சஷ்டி கவசத்தினை ஒரு நாளைக்கு முப்பத்தாறு தடவை தொடர்ந்து மனமுருகித் துதித்தால் எட்டுத் திக்கும் உனது வசமாகும் என்று அர்த்தமாகும். “கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்காலையில் மாலையில் கருத்துடன் நாளும்ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேசமுடன் ஒரு நினைவது வாகிக்கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டுஓதியே செபித்து உகந்துநீ றணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்”. கந்தர் சஷ்டி கவசம் (கந்தர் கவசம்) மூலமும் விளக்கமும் கந்த சஷ்டி கவசம் என்பது பாலன் தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட பாடலாகும். இக் கவசத்தினை இயற்றியவரான பாலதேவராய சுவாமிகள் மிகச்சிறந்த முருக அடியார் என்பதும் 16 ஆம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்தார் என்பதும் மட்டுமே அறியப்பட்டுள்ளது. அவரது பூர்வீகம் அறிய முடியவில்லை. பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக கந்தர் கவசங்களை இயற்றியுள்ளார். அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டி கவசம் என்று அழைக்கப் படுகின்றன. ஆனாலும் இப்போது அதிகம் பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய “சஷ்டியை நோக்க சரவண பவனார்” என்று ஆரம்பிக்கும் கவசமே பெறும்பாலானோர்களால் தினமும் படிக்கப்படுகிறது. சஷ்டி கவசம் பிறந்த கதை: முருக பக்தனான பாலதேவராய சுவாமிகள் ஒருசமயம் கடும் வயிற்றுவலியால் துன்புற்றார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து பாலதேவராய சுவாமிகள் சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம். என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். விரத முதல் நாள் திருச்செந்தூர் கடலில் நீராடி முருகனை வழிபட்டு விரதத்தினை முடித்து கோயில் மண்டபத்தில் தியானத்தில் அமர்ந்தார். அப்போது அவருக்கு முருகப் பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அந்தக் கணமே பாலதேவராய சுவாமிகள் மனதில் முருகனை நோக்கிப் பாடத் தோன்றியது. “சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்” என்று ஆரம்பிக்கும் திருச்செந்தூர் திருத் தலத்திற்கான 238 வரிகளைக் கொண்ட சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனிமலை, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை ஆகிய திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். ஆறு சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்த போது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி பூரண குணமாகி இருந்தது. கந்தசஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை உணர்ந்து கொண்ட சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கந்த சஷ்டி கவசத்தில் வரும் “சிரகிரி வேலவன்” எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை. சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க மந்திரவரிகள் கொண்டது சஷ்டி கவசம். தினமும் இந்த கவசத்தை ஓதி முருகனை நினைந்து வணங்கி வர தீவினை அகலும். அதிலும் சஷ்டி திதியில் ஓதி வழிபட இன்னும் பலமடங்கு பயன் உண்டு. அதனால் இதற்கு சஷ்டி திதியில் சொல்லும் கவசம் என்ற பொருளில் சஷ்டி கவசம் என்ற பெயர் வந்தது முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் அனுஷ்டிக்கப் படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

Uncategorized

கேதார கௌரி விரதம்

இவ்விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் முடிவுறுகின்றது. இருபத்தொரு நாட்ளைக் கொண்ட மஹோன்னத விரதம் இதுவாகும். சிவனுக்குரிய சிறந்த விரதங்களில் இவ்விரதமும் ஒன்றாகும். இவ்விரதம் அம்மன் மற்றும் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்களுக்கு 21 நாட்கள் அமைந்த பிள்ளையார்கதை விரதம் போல பெண்களுக்கு 21 நாட்கள் அமைந்த கௌரி விரதமாகும் மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டும் என்றும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிப்பர். ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிப்பதுண்டு. எந்த விரதமாக இருந்தாலும் விரத ஆரம்ப நாளில் விநாயகர் பிடித்து வைத்ததே விரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். களிமண் அல்லது மாட்டுச் சாணம் அல்லது சந்தனம் அல்லது மஞ்சள் ஆகியவற்றில் ஒன்றினால் பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல் குற்றி பூசை அறையில் வைத்து விநாயகராக வழிபடல் வேண்டும். விரத நாட்களில் தினமும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரைப் பொங்கல், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை படைத்து கௌரி நோன்பு பாடல் படித்து வழிபடல் வேண்டும். விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இருபத்தோராவது திதியான இறுதி நாளன்று அந்நூலை கோயில்களில் குருக்களைக் கொண்டும் அல்லது வீடுகளில் தாமாகவேனும் ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர். விரத வரலாறு மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என் அழைப்பர். அப்படியான இமயமலை கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதிதேவி சிவனை நினைந்து சுயம்பு லிங்கத்தினை வழிபட்டு கேதார கௌரி நோன்பிருந்து அதன் பலனாக சிவனுடன் பாதியாக அதாவது அம்மை, ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவராக இணைந்து கொண்டார் என்பது புராணம். சிவனை நோக்கி இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரி விரதம் எனவும் தேவி வழிபட்டபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது. விரிவான வரலாறு முன்னொரு காலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருந்து. பிருங்கிகிருடி முனிவரின் நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலாயமலையை விட்டுத் தவம் செய்வதற்காக இமயமலை கேதாரப்பகுதியில் கௌதம முனிவரின் ஆச்சிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விழங்கியது. மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆச்சிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் தோன்றினான். இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனின் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று “அங்கனமே ஆகுக” என்று அருள் புரிந்தார் என்பது புராணம். கேதார கௌரி விரத பாடல் தேவி துணை ஓம் சக்தி காப்பு முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய் சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும் எக்குற்றமும் வாராமற்கா. வேண்டுதற் கூறு காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன் எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய் பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய் உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய் காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன் காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய் சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே அரியை உடையவளே அம்மா காளிதாயே கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய் பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய் அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய் சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய் ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய் விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும் அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர் நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிவிடு காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே! ஏட்டுடைத் தேவியரே எல்லாம்மிகு வல்லபையே காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள் நானுமக்குத் தாறேனம்மா நயந்து எம்மைக் காருமம்மா காளிமகா தேவியரே காசினிக்கு வித்தவளே வித்தை விதைப்பவளே வினையாவும் காப்பவளே எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே காசினியில் வேற்றுமையை கணப்பொழுதே மாற்றிவிட்டால் ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏத்துபுகழ் தேவியளே காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும் ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும் தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும் இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும் நம்பி அணிவோர்க்கு நல்லதெல்லாம் பெருகிவரும் நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும் சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே குங்குமப் பூச்சுவளே குலக்கொழுந்தே கௌரியம்மா காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன் நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில் பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன் காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன் ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன் காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன் ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன் தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி சொல்லற்கு அரிதான சோதிமிகு காப்பதனை இருபது நாள்வரையில் இசைவோடு தவமிருந்து பக்தி மனதுடனே பரவி அணிவோர்க்கு சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள் முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு எச்சகத்தில் உள்ளோர் எல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர் சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள் கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல் முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர ஞானம் ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பருளும். திருச்சிற்றம்பலம்

Scroll to Top